Tuesday, June 9, 2015

தென் மாநிலங்களில் தெலுங்கானா பிரிவதற்கு முன்னரே ஆந்திராவில் ஹைதரபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது உண்டு. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது மங்களூவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவை பொறுத்தவரை கொச்சியில் மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. தற்போது அங்கேயும் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
கீழை நாடுகளின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆழப்புழா நகரில்தண்ணீரால் சூழ்ந்த இடத்தில் அழகிய கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கேரளா கிரிக்கெட் சங்கம் சார்பில் கட்டப்பட்ட இந்த மைதானத்தை நேற்று கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா திறந்த வைத்தார். அங்குள்ள எஸ்.டி கல்லூரி மைதானத்திற்கான நிலத்தை இலவசமாக வழங்கியது. பின்னர் சுமார் ரூ. 3.5 கோடி செலவில் தற்போது இந்த ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இந்த மைதானத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த கேரள கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் தலைநகரை தவிர்த்து மற்ற நகரங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முதல் கட்ட முயற்சி எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஒரே ஒரு ஸ்டேடியம்தான் உள்ளது. சென்னையை தவிர வேறு எங்கும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் அளவுக்கு கூட தரமான கிரிக்கெட் மைதானங்கள் தமிழகத்தில் கிடையாது.கோவையில் சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தமிழகத்தில் சென்னையை தவிர கோவை அல்லது மதுரை போன்ற நகரங்களில் சர்வதேச போட்டிகளை நடத்தும் அளவிற்கு கிரிக்கெட் மைதானங்கள் அமைக்கப்படும் பட்சத்தில், சர்வதேச அளவில் அந்த நகரங்கள் பிரபலமடைய வாய்ப்பு ஏற்படும். இது சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்.
நியூசிலாந்து போன்ற நாடுகளில் அழகிய மலைகளுக்கிடையே கிரிக்கெட் மைதானங்கள் அமைந்திருப்பதை பார்த்திருக்கிறோம். அதேபோல் நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க முயற்சிக்கலாம்.கிரிக்கெட்டை வைத்து இரண்டாம் கட்ட நகரங்களை பிரபலப்படுத்த எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தில் பரவலாக பல நகரங்களில் இளம் வீரர்களுக்கு உயர்தர பயிற்சி கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகும் வாய்ப்பும் அமையும்.

எல்லா திட்டங்களும் சென்னைக்குதான் என்பது போல கிரிக்கெட்டிலும், தமிழகத்தின் மற்ற நகரங்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்...!

No comments:

Post a Comment